RSS Feed

Author Archives: வளத்தூர் கார்த்தி.தி

2011

2011 எனக்கு என்ன தந்தது.. ?

 

இதே கேள்வியை கடந்த வருடம் டிசம்பர் மாதம் கேட்டதாக நினைவு..

 

ஒவ்வொரு வருடம் முடியும் போதும்… புது வருடம் தொடங்குகிறது.. என்ற மகிழ்ச்சியைவிட..

 

ஒரு வருடத்தை.. கடத்தி விட்டோம்.. அல்லது.. இந்த வருடம் என்னையும் கடத்தி வந்துவிட்டது… என்கிற நினைப்பே… ஒரு வித நிம்மதியை தரும்.

 

பால்யங்களில்.. எனது கிராமத்தில்…புது வருடம் ஒன்றும் அவ்வளவு விஷேசமாக இருந்ததில்லை..  ஒரு சராசரி இரவைப்போலவே… அமைதியாகவும்… நாய்களின் ஊளைகளோடும் கழியும்..

 

பிழைப்புக்காக… சென்னைக்கு வந்ததும் தான்.. இந்த புத்தாண்டு இரவை வரவேற்க்கும் விநோதம் புலப்பட்டது..

 

அதுமுதல்.. எல்லா புத்தாண்டு நெருக்கங்களிலும்… கடந்த ஆண்டு என்ன நடந்தது.. அடுத்த ஆண்டு எப்படி நடக்கும் என ஆராய்வது வாடிக்கை…

 

2001 முதல் 2009 வரை.. என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஒரு சமூக சாடலும்.. சமூக புலம்பலும் சார்த்து இருக்கும்..

 

அதுவரை என் வாழ்க்கை என்னோடு மட்டும் இருந்தது காரணமாக இருக்கலாம்…. 2010.. என் வாழ்க்கையில் அனுராதா மனைவியாக நுழைந்தாள்.. சமூக பார்வையும்.. வேட்கையும்… தனித்துவிட்டேன்..

 

குடும்ப சூழலில்… சில வேட்கைகளுக்கு ஓய்வு அளிக்கலாம் என்பதாக என் முடிவு..

 

இவாறாக நான் 2010ஐ முடித்தேன்..

 

2011

 

அப்போது என் மனைவி கர்பம்..

 

புதுமண தம்பதிகள்.. தனிக்குடித்தனத்தில். வரும் எல்லா சச்சரவுகளும் எங்களுக்குள்ளும் வந்தது.. சற்று தூக்கலாகவே…

 

என்னவளின் நிலையை உணராமல்.. நான் என்ற ஆணவத்தில் நான் ஆடிய ஆட்டம் கொஞ்சம் அல்ல..

 

கூடுதலாகவே அவளை கஷ்டப்படுத்தினேன்… அந்த கர்ப காலத்தில்… பிறகு.. சில கண்ணீர்…. சில கோபங்களுக்கு இடையில்..

 

என் தவறை உணர்ந்து அவளை கனிவாக நடத்திய காலங்களில்.. அகரன் பிறந்தான்..

 

அளவில்லா மகிழ்ச்சி…

 

ஏப்ரல் 25.. காலை  அந்த நொடிகளில்… என் எண்ணமெல்லாம்.. அவள் தான்… அனுதான்..

 

பிறக்கும் குழந்தை பற்றிய ஆவலும்.. மகப்பேறு பயங்களும்.. சூழ்ந்து இருந்தது…

 

ஆனாலும் பிறந்தான்… என் மகன்..

 

முன்பே நாங்கள் முடிவெடுத்தோம்.. ஆண் மகனென்றால் “அகரன்” – பெண் மகளென்றால் “தமிழ்மொழி”…

 

அகரன் வென்றான்.. கா.அ.அகரன்…

 

வசந்தங்களை அள்ளித்தந்தான்..

 

 

 

என் குரூரத்தை எனக்கு உணர்த்தியது… இந்த 2011..

 

பல்வேறு சந்தர்ப்பங்களில்.. நாங்கள் சண்டையிட்டபோது… என்னை எனக்கு உணர்த்தியது…

 

என்னை நான் உயர்வாகவே நினைத்திருந்தேன்… அவ்வாறாக நான் நினைப்பது… பிரம்ச்சார்யனாக இருந்த போது சரி..

 

ஆனால் சம்சாரியாக ஆன போது..

 

உணர்ந்தேன்..

 

எல்லாரும்..

 

குறைந்தபட்சம்… மனைவியாவது..

 

என்னை நல்லவன் என உணரவேண்டும்…

 

என 2011 எனக்கு உணர்த்தியது.. அவ்வாறாகவே இனி வரும் காலம் இருக்கும் என நினைக்கிறேன்..

 

 

20 % சண்டை…. 5% கண்ணீர்… 10 % கோபம்… 40 % மகிழ்ச்சி.. மீதம்.. நான் அவளாகவும்.. அவள் நானாகவும்… வாழ்ந்தோம்..

 

இனி வரும் காலங்களில்.. சதவீதம் மாறும்… காலம் மாறாது…

 

உணர்ந்து… வாழ்வில்… வாழ்வை மாற்றுவோம்…

 

 

வேலை..

 

 

என் வேலை பரப்பரப்பாகவே கழிந்தது.. 2011 தொடக்கத்தில்.. அதிக வட மாநில பயணம்… தில்லி.. குஜராத், பஞ்சாப், மும்பை.. என பறந்து.. பறந்து போனேன்..

 

அதே நேரம்.. மிக அதிக ஓய்வு எடுத்ததும் இந்த 2011ல் தான்..

 

பல புதிய ப்ராஜக்ட்களை.. வெற்றிகரமாகவும்.. அச்சர்யகரமாகவும் முடித்தேன்.. வழக்கம் போல பல பாடங்களை பெற்றேன்…

 

பணம்…

 

2011 ஏராளமான பணம் சம்பாதித்தேன்.. அளவுக்கு அதிகமாகவே செலவளித்தேன்…

 

சில நேரங்களில்.. பணம் இல்லாமல் திண்டாடினேன்.. சில நேரங்களில்… அதிகமாகவே பணம் புழங்கியது..

 

அதிக வரி கட்டினேன்.. என் வருமானத்திற்க்கும்.. என் நிறுவணத்திற்க்கும்..

 

நிதி மேலாண்மை.. 2011 பாதிகளில்.. அனுவிடம் சென்றதால்… பணம் கொஞ்சம் பிழைத்தது..

 

கடனில்… சிலவற்றை அடைத்தேன்.. சிலவற்றை பெற்றேன்.. இவ்வாறாக பணம்.. பண்ணியது.. எங்களை..

 

பொருள்..

 

மாருதி ஏ ஸடார் – கார்

 

அப்பிள் ஐ-பேட் – டேப்ளட்

 

ஆப்பிள் மேக் புக் புரோ – லேப்டாப் இவற்றை வாங்கினேன்…

 

அநாவசிய என் செலவுகள்.. இவற்றால் வாழ்க்கை ஒன்றும் மாறிவிடவில்லை..

 

இனி மேல் மாறலாம்..  எனக்கு கார் ஓட்டத்தெரியாது… என் மனைவிக்கு குச்..குச்.. தெரியும்.. பார்க்கலாம் 2012ல் அவள் படா.. படா ஓட்டுவாள் (காரை)..

 

இன்ன பிற…

 

பெரும்பாலான சினிமாக்களை திரையரங்கில் பார்த்தோம்… சுமாராக மாதம் மூன்று வீதம் 36 படம் திரைஅரங்கில்.. மனைவியுடம்..

 

நான் டிவிடியிலும்.. டிவியிலும்.. சுமார் மாதம் 10 வீதம் 120 படம் பார்த்திருப்பேன்.. வழக்கம் போல உண்டு களித்தோம்.. கழித்தோம்..

 

வைகோவின் ஒரு கூட்டத்திற்க்கு சென்றோம்…

 

இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு சென்றோம்..

 

பல கோயில்களுக்கு சென்றோம்.. (அவளுக்காக.. அவளுடன் மட்டும்)…

 

காரைக்குடி சென்றோம்..

 

பெரும்பாலும் எல்லா பயனங்களிலும்.. அகரனை என் மாமியாரிடம் விட்டு.. சென்றோம்..

 

பக்கத்து தெருவில் மாமியார் இருப்பது எவ்வளவு வசதி…

 

சென்னை வந்த 10 வருடங்களில்.. அதிக நாட்கள் என் பெற்றோர் என்னிடம் சென்னையில் தங்கினார்கள்.. பேரன் அகரனுக்காக..

 

என் தம்பி.. ராஜேசும்.. பாலாஜியும் கூட.. சென்னையை பிரிந்த பிறகு அதிக அளவில் வந்தனர்.. அண்ணிக்காகவும்.. அகரனுக்காகவும்…

 

ராஜேசுக்கு திருமணம் நிச்சயமானது…

 

 

இவ்வாறாக கழிந்தது..

 

பார்க்கலாம்..

 

2012ல் அதிக அளவு மனைவியிடமும்.. அகரநிடமும்… பெற்றோரிடமும்…நண்பர்களிடமும்..மக்களிடமும்..மனிதர்களிடம்.. நல்ல பெயரையும்… நல்ல நிகழ்வுகளையும் பெற முயற்ச்சிக்கிறேன்..

 

இழந்தவை..

 

ஒவ்வொரு வருடமும்.. ஏதாவது ஓரு புதிய வியாபார முயற்ச்சி இருக்கும்.. இந்த வருடமும் வழக்கம் போல ஏராளமான சிந்தைகள் ஆனால் எல்லாம் ஏட்டளவில்..

 

மற்றும்.. சமூக வேட்கையுள்ள ஒரு முந்நாள் புரட்சியாள வேசம் போட எண்ணிய கார்த்தி..

Advertisements

அகரன் – எங்கள் மகன்..

அகரன் – எங்கள் மகன்..

நினைக்கையில்… நினைத்துப்பார்க்காத ஒரு உணர்வு..

என் மனைவி தாய்… நான் தந்தை..

வாழ்வில் என்றேனும் ஒரு நாள் நாங்கள் பெற்றோர் ஆவதற்க்கான நிச்சயம் இருந்தாலும்..

எங்கள் அகரன் பிறந்த ஏப்ரல் 25,  2011, கர வருடம் சித்திரை மாதம் 12.33 மணிக்கு.. அவள் மருத்துவ படுக்கையில்..

நாள் மருத்துவ வாயிலில்..

இதயம் துடி துடிக்க…

பத்து முறை, மொபைல் கீபேடை.. லாக் அன்லாக் செய்து..

குட்டிப்போட்ட பூனையாய்..

என் குட்டிக்காக காத்திருந்த வேளைகளில்…

என் மனைவி என்ன நினைத்திருப்பாள்… என் நான் எண்ணிக்கொண்டிருக்கையில்..

ஓடி வந்த செய்தியில் அவன் ஒளிந்திருந்தான்..

முதல் முறை பார்த்தபோது… ஒன்றும் ஆச்சர்யமில்லை..

மீண்டும். மீண்டும் பார்கையில்..

அவனை மட்டுமே.. பார்க்கிறேன்.. பார்த்துகொண்டு இருக்கிறேன்..

எங்கள் இளவரன் வந்து.. மேலும் எனக்கும் என் மனைவிக்கும் உள்ள

நெருக்கத்தை அதிகப்படுத்துகிறான்..

அவள் கண்ணில் தெரியும் சோகம்..

அவள் உடலில் தெரியும் வலிகள்..

சொல்ல துடிக்கும் உதடுகள்..

இன்று என்ன யோசித்திருக்கும் என் குழந்தை…. ?

என்கிற யோசனையோடு..

கார்த்தி..தி.

TPM – Total Politics Management

இதோ.. 2011 தேர்தல் முடிந்து விட்டது..
யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி.. கலைஞரும்.. அவர் குடும்பத்தின் ஆத்திகமும் தொடரும்…
இதனால் சகலமானருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால்..
2001 – 2011 வரை…தமிழக ஊடகங்கள் (ஆளும் கட்சி.. எதிர் கட்சி.. சார்ந்த..ஆங்கிலம், தமிழ்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.. தின பத்திரிக்கைகள்.. வார இதழ்கள்.. இனைய இதழ்கள்.. வலைப்பதிவுகள்.. சுவரொட்டிகள்.. ) என எல்லா வற்றையும் பதிந்து எடுத்து..
அவற்றை ஆய்வு செய்வதன் மூலம்.. நீங்கள் உங்கள் நாட்டையும்.. மாநிலத்தையும்.. மாவட்டத்தையும்.. தாலுக்காவையும்.. வார்டையும்.. தெருவையும்.. உங்கள் வீட்டையும்… வென்று எடுக்கலாம்..
இவற்றில் இருந்து.. நீங்கள் கற்கும் அரசியல்.. உலகில் எங்கும் கான கிடைக்காது.. எந்த சரித்திரத்திலும் படிக்க முடியாது…
தன் இனம் அழிந்த போதும்.. தான் உட்காரும் இடமும் (நாற்காலி).. தன் குடும்பமும்.. அதன் நலனும் மட்டுமே பேனி.. ஊடகத்தினால் மக்களை மயக்கி..

 

சிற்றின்பங்களில் மக்களை மூழ்கடிது.. பன்னாட்டு நிறுவனங்களில் வருகையால்.. முன்னேறிய சில தலைமுறைகளை காட்டி.. பெரும்பான்மை மக்களை மயக்கி… அதன் மூலம் இன அழிப்பை மறைத்த பெருமை..
தமிழ் மொழி பேசும் ஒரே காரணத்தால் இரு இனம் அழிந்த போது.. அந்த தமிழ் மொழிக்கு செம்மொழி மாநாடு நடத்து.. தனக்கு தானே கிச்சு.. கிச்சு.. மூட்டி கொண்டதென்ன..
பெரியார்.. அண்ணா வளர்த்த கொள்கைகளை… மறந்து.. மக்கள் பணம் கொள்ளை அடித்து… தன் கொள்கையை திகார் சிறைகலில் வளர்ப்பதென்ன..
யார் கற்று தருவார்கள் இந்த பாடங்களை..
எதிர்கட்சிகள் மட்டும் என்ன..
கொட நாட்டில் ஓய்வு எடுப்பதே தன் பணி என.. முடிவெடுத்து செயல்பட்டவர்களின் ராச தந்திரம் என்ன…
கத்தி.. கத்தி.. ஒய்ந்து போன தமிழ் உணர்வாளர்கள்..நாடளுமன்ற தேர்தலிலும் 2011 சட்டமன்ற தேர்தலிலும்.. தொலைந்து போனதென்ன…
சொல்லி…சொல்லி.. படித்து.. படித்து.. உங்களை மெருகேற்ற வேண்டாமா?
எங்களிடம் பாடம் படியுங்கள்..
நீங்கள் மக்களை சுலமாக ஏமாற்றலாம்..
2011 – 2016 வரை பாட திட்டங்கள் தீட்டப்படுவிட்டன..
யார் ஆண்டாலும்.. பாடம் கற்க போவது நீங்கள்..
ஏமாற்றுங்கள்… மக்கள் உள்ள வரை ஏமாற்றுகள்

அறம்..

கண்ணாடி மயக்கங்களில்..

நறுமண சந்தைகளில்…

குறுக்கிடும் கட்டழகுகளில்..

செல்லில்..செல்லும்..

சொல்லில் சொல்லும்..

எங்கு சென்றாலும்..

உன் அருகாமையை

ஞாபகப்படுத்தும்..

நம் இல்லறம்..

அதுவே.. நமக்கு அறம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதிகாலை..

அதிகாலைக்கான அர்த்தம் வெகுநாட்களாக எனக்கு புரியவில்லை..

பால்யத்தில் என் அதிகாலை கோடைகாலங்கலில் 7.00 மற்றும் குளிர்காலங்களில் 6.30.

எங்கள் அப்பாவின் பாட்டி.. ருக்குமணி ஆயா காலையிலும்.. மாலையிலும் சொன்ன கதைகளின் என் அதிகாலைகள் தொடங்கும்..

குளிர்காலங்களில்.. ஆயா அடுப்பு அருகே அமர்ந்து.. சுடு தண்ணீடுக்காக.. விறகு.. வரட்டி எரிக்கும் பொழுதுகளில்.. வெயில் சுட்டெரிக்கும் வரை அந்த வெப்பத்திலேயே காலை வந்துவிடும்.

பின்பு பள்ளி காலங்களில்.. அதிகாலை.. அன்றைய பள்ளி கால அட்டவணை மற்றும்.. நேற்று செய்யாமல் விட்ட.. வீட்டு பாடங்கள்.. மிச்ச பாடங்களை பொறுத்து அமையும்…

தேர்வுக்காக அதிகாலைகளில் எழுந்ததாக ஞாபகம்..

பின்பு.. எங்காவது கல்யாணம்.. திருப்பதி போனறவற்றிற்க்காக எங்கள் ஊர் வி.டி,ம் 4 மணி மற்றும் 6 மணி பேருந்து பயணங்களில் என் அதிகாலைகள் கழிந்தன..

ஒரு நாள் திடீரென பணம் மற்றும்.. வறுமை பற்றிய சுய விளக்கங்களை அறிந்த போது.. இரவுகள் நீண்டன.. அதிகாலைகள் மறந்தன..

எங்கள் அப்பா.. டீக்கடை ஆரம்பித்த முதல் நாள்.. இன்றும் என் நினைவில் நிழலாடும் அந்த நாள்..

முந்தின இரவே அப்பா சொல்லிவிட்டார்.. காலையில் கார்த்தியை கடைக்கு அனுப்பு.. டீ கொடுத்து அனுப்புகிறேன் என்று..

பெரும்பாலும்.. கிராமங்களில்.. டீக்கடை நடத்துபவர்களில் வீட்டில் பால்வாங்கி டீ.. காப்பி வைப்பதில்லை.. தேவைக்கு.. தங்களில் கடைகளில் இருந்தே வரவழைப்பர்.. தேவைக்கும்.. விருந்தினர்க்கும்..

என் அம்மாவும்.. பாட்டியும் அதிகாலையிலேயா தன் மனத்தையும்.. உடலையும் தயார்படுத்திவிடுவர்.. கடும் உழைப்பிற்க்கு..இட்லிக்கு மாவு அரைப்பது… (க்ரைண்டரில்).. வடைக்கு மாவு அரைப்பது.. (ஆட்டு உரலில்)… சட்னிக்கு தேங்காய் அரைப்பது.. (க்ரைண்டரில்).. என காலை தொடங்கி…இரவு 11.00 வரை உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு மட்டுமே.

அன்றைய பொழுதுகளில்.. க்ரைண்டர் சத்தமும்.. பல் துலக்காமல் டீ குடிக்கலாம் என்ற ஆசையுமே என்னை அதிகாலையில் உலவவிடும்..

ஒரு ஊரில் முதலில் எழுவதும்.. எழுப்புவதும்.. டீக்கடை கதவுகள் திறக்கும் ஓசைதான்..

குளிர் காளங்களில் 4.00 மணிக்கும்.. கோடை காலங்களில் 4.30 மணிக்கும் எங்கள் டீகடை திறக்கப்படும்..

அதிலும் அன்றைய சன் மியூசிக் மற்றும் சன் டீவியில் ஒரு கமல் பாட்டு.. ஒரு ரஜினி பாட்டு என மாற்றி மாற்றி போடுவார்கள்.. அதை கேட்டுக்கொண்டே டீ ருசித்து.. என் அதிகாலை தொடங்கும்..

முதலில் என் சரோஜா ஆயா தான் வடைக்கு மாவு அரைத்து.. பூரிக்கு மாவு பிசைந்து.. பூரி சுடுவார்.. எங்கள் அம்மா… இட்லி.. சட்னி.. சாம்பார் மீண்டும் இட்லி என காலை பத்து மணி வரை அடுப்படியில் இருந்து விலக வாய்ப்பில்லாமல் சுழலுவார்…

நான் மற்றும் என் தம்பிகளின் வேலை கடைக்கு… வீட்டில் சமைக்கப்படும் பொருட்களை எடுத்து செல்லவது…

முக முக்கியமான வேலை மற்றும் கஷ்டமான வேலை என்பது.. கடைக்கு தண்ணீர் எடுத்து செல்வது.. ஒரு தொழிற்ச்சாலைக்கு மின்சாரம் போல.. ஒரு கிராம்த்து டீ கடைக்கு ஆதார பொருள் தண்ணீர்…

எனக்கு அப்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. (பின்பு… 10 வகுப்பு படிக்கும் போதுதான் கற்றுக்கொண்டேன்…இன்று வரை எனக்கு வண்டி ஓட்ட தெரியாது)… முதலில் தண்ணீர் குடங்களை தோலில் சுமந்து.. எடுத்து சென்றேன்.. அன்றைய பொழுதுகளில் என் தம்புகள் இந்த வேலையை செய்யவில்லை.. (இரண்டு வருடங்களுக்கு பின்பு.. அவர்களுடைய பொழுதுகளும் தண்ணீர் குடங்களும்.. தேனீர் டம்பளருமாக கழிந்தது..)

முதலில் எங்கள் அப்பாவின் சைக்கிளிலும்… பின்பு உயர பிரச்சைனையால்.. குள்ள வாடகை சைக்கிளிலும்.. இரு பக்கங்களிலும்.. குடங்களி தாப்பு கயிரால் சுறுக்கு போட்டு.. இரு குடங்களை துனைக்கு ஆள் சேர்த்து.. ஒரு சேர தூக்கி.. சைக்கிள் கேரியரில் வைத்து.. தள்ளி கொண்டே செல்வேன்….

 

இப்படியாக என் அதிகாலை தொடங்கியது என் 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை.. எங்கள் பாஸ் மாம ஒரு சைக்கிளை எங்களுக்காக கொடுத்தார்.. அதில் இந்தியன் (கமல் படம்) பட லோகோ .. விளம்பர கட்டிங்.. ஒட்டி பல மாதம் சைக்கிளை தள்ளி கொண்டே சென்றுகொண்டிருந்தேன்..

பின்பு, ஒருமாதியாக.. சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டு  அதில் தண்ணீர் எடுத்து சென்றேன்…

எங்கள் அதிகாலை.. எங்கள் வீடு.. மற்றும் உற்றார் வீட்டு தண்ணீர் தொட்டிகளிலும்.. கழிந்தது..

10ம் வகுப்பு முடித்த பின்பு.. நான் என் பாஸ் மாமா வீட்டில் தங்கி (ஜோலார்பேட்டை) படித்தேன் (வாணியம்பாடியில்).. அங்கு வித்தியாசமான அதிகாலைகள் உலவின..

என் மாமா வேலை நிமித்தமாக.. வாரம் மும்முறை அதிகாலை சுமார் 3.00 மணிக்கு சேலம் பயணிப்பார்.. (ஆமாம்.. அவர் வேலை சேலத்தில் தான்.. ஆனால் மனைவியின் வேலை ஜோலார்பேட்டையில்..நள்ளிரவு 12.00 மணிக்கு வருவார்.. அதிகாலை மூன்று மணிக்கு செல்வார்..) என் தற்போதைய வாழ்க்கைக்கு ஒரு inspiration is my Bass mama’s life and சுறு சுறுப்பு..

அந்த அதிகாலைகளில்.. அவர் கிளப்பும்போது.. என் கெஜா ஆயா.. பால் அல்லது பூஸ்ட் கொடுப்பார்.. அவர் குடிக்காமல்.. அல்லது மீச்சம் கிடைக்கும் பால் அல்லது பூஸ்ட் எனக்கு தருவார் என் ஆயா..

குடித்துவிட்டு துங்கிவிடுவேன்..

இங்கு அதிகாலைகளை நிர்ணயிப்பது.. கல்லூரி பாடங்கள் தான்..

கல்லூரியின் மூன்றாம் ஆண்டு.. மீண்டும் என் வளத்தூர்.. மீண்டும் எங்கள் டீ கடை..

இந்த அதிகாலைகள் மிகவும் என்னை களைப்படைய செய்யும்..

காலையில்.. டீ வாங்கி வீட்டுக்கு வந்து.. அம்மா, ஆயாவுடன் குடித்து… முடிக்கையில்.. என் பாட்டி வடைக்கு மாவு அரைக்க தாயாராவாள் … அவளின் வயதும் தாராகிக்கொண்டிருந்தது.. (சுமார் 65 வயதிருக்கும் அவளுக்கு அப்போது) நாணும் அவளும் வடைக்கு மாவு அரைத்து..

பின்பு அவள் பூரிக்கு மாவு பிசைகையில்.. நான் கரண்டி பிடிப்பேன்.. அதிகாலைகளில்..

கல்லூரி செல்லும் முன்.. வடை.. பூரி சுட்டு.. வளத்தூரில் இருந்து.. வாணியம்பாடி கல்லூரிக்கு பயணிப்பேன்.. என் வேலையை என் தம்பி.. ராஜேஷ் மற்றும் பாலாஜி தொடர்ந்தனர்..

பின்பு.. பிழைப்புக்காக சென்னை என்னை அழைத்தது..

சென்னையில் அதிகாலை.. எவ்வளவு அமைதியானதோ… அவ்வளவு கொடுமையானது..

இங்கு என் வாசம்.. என் கலா அத்தை வீட்டில்… சுறு சுறுப்பின் மறு வீடு என் அத்தை வீடு..(என் அத்தை வீட்டில் நான் அடைக்கலம் ஆனது.. அங்கு என்னை அவர்கள் மனிதனாக மாற்றியது பற்றி, வரும் நாட்களில்.. தனியே ஒரு பதிவு எழுதலாம்)

இங்கு அதிகாலைகள் என் நந்தா மாமா அதிகாலை 5.00 மணிக்கு வேலைக்கு செல்கையில் அறிமுகமானது..

பின்பு என் வேலையும் அதிகாலைகளில் தொடங்கியது,, 12 மணி நேர வேலை..

அதிகாலை 4.00 பணி முடிந்து.. ஒரு நாள் அதிகாலை, வெறி கொண்டு.. தூக்க போதை.. 4.30 மெரினா கடற்கரையில் அலைந்தது இன்றும் ஞாபத்தில் உள்ளது.,.

பெரும்பாலும்.. எனக்கு.. என் அதிகாலை.. சென்னையில்…

என் வேலை மட்டுமே தீர்மாணிக்கின்றது..

கல்யாணம் முடிந்த பின்பி..

என் அதிகாலை.. என் மனைவியுடன் துவங்குகிறது..

அவள் முதலில் எழுவாள் என நானும்..

நான் எழுந்த பின்பு.. எழலாம் என் அவளும்…

அதிகாலைகளில் கிடக்கின்றோம்..

பிரிந்திருக்கும் நாட்களில்..

மொபைலில்.. ஊடலுடனோ.. வெறுப்புடனோ

அதிகாலைகள் உலவுகின்றன..

ஒரு நாள் குளிர்சியாக..

ஒரு நாள் வெக்கையாக…

ஒரு நாள் அவளாக…

ஒரு நாள் நானாக..

என் அதிகாலைகள் தொடங்குகின்றன..

பெரும்பாலான அதிகாலைகள்.. முந்தின நடந்த ஊடல்.. கூடல்.. பிரிவு… கனவு… போன்றவற்றின்

நிழலாக மட்டுமே விடிகின்றன..

இபோது..

என் அதிகாலைகள்

அவளுடம் மட்டுமல்ல

எங்கள் வாரிசுடன்

தொடங்க.. காத்திருக்கின்றன…

என்னைப்போல..

இனி என் அதிகாலைகலை என் வேலை தீர்மானிப்பதில்லை.. அன்றைய.. பண தேவைகள் தீர்மாணிப்பதில்லை.. அதிகாலைகள் என்னுடம் மட்டும் இருப்பதில்லை… அதில் பங்கெடுக்க.. பங்குபெற… இன்று இடண்டு உயிர்கள்.. உலவுகின்றன..

ஒரு நாள் அதிகாலையில்..

 

 

 

ரயில் நிலையம்

எங்கள் ஊர் நிலையம்…
என் நினைவு தெரிந்து.. ஈ…. காக்கா.. மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் மட்டுமே புழங்கும் ஒடு இடம்..
வருடத்திற்க்கு ஒரு முறை.. திருத்தனி காவடிக்காக எங்கள் கிராம மக்கள் மொய்க்கும் இடமாக மாறும்..
பின்பு யாராவது ஒரு சிலர்.. ஒரு சில நேரங்களில் பயனுப்பது..

பால்யத்தில்… நான், என் தம்பிகள்.. மற்றும் எங்கள் உறவினர்களான.. குடியாத்தம் கலைமகள் அச்சகம் – பொண்ணம்பலம், சோழமூர் – சீனு, சதீஷ், குழலி, சுமதி மற்றும் சில உறவினர்களுடன் இந்த ரயில் பதைகளில் சாகச பயணம் (அப்போ அது தான் சாகசம்) மேற்கொண்டது இன்றும்.. நினைவில் சுவைக்கின்றது.. பின்பு.. என் நண்பன் சரவணண் , விமலுடன், தினேஷ் மற்றும் நினைவில் நிழலானும் நண்பர்களுடன் பயணித்த பொழுதுகள்..

என்னவெல்லாம் பேசினோம்.. ரயிலை கவிழ்க்க சதி தீட்டியது… விடுதலை புலிகள் இயக்கத்தில் சேருவது.. எண்ணமெல்லாம் பேசினோம்..
ஐந்து காசு.. பத்து காசு நாணயங்களை, ரயில் கடக்கும் முன் தண்டவாளத்தில் வைத்து… காந்தம் தயாரிக்க முற்ப்பட்டது..
சிதறி விழுந்த நிலக்கரிகளை எங்கள் வீட்டு அடுப்பில் வைத்து பரிசோதித்தது.. (ஆனால் கடைசி வரை அது எரியவே இல்லை)..
ஆனாலும் இன்று வரை நாங்கள்… எங்கள் ரயில் நிலையத்தில் இருந்து.. எங்கள் பால்யத்தோடு.. எங்குமே பயணித்தது இல்லை..
பின்பு.. வயது வளர்த்து.. வேலை நிமத்தமாக.. பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கும் போது.. கடந்து போகும் எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் எங்களின் பால்யம்எங்களை விழுங்க காத்திருக்கின்றது…
இப்போது தண்டவாளங்களில் .. காலார பயணிக்க.. காலமும்.. பொருளும்.. அகந்தையும்.. அறிவும் தடுக்கலாம்..
என்றேனும் கிழடு தட்டி.. துனையிழந்து.. சொந்த மண் பார்க்க உங்கள் நினைவு திரும்புகையில்.. மழலையாக.. நாம் பால்யத்தில் தொலைய முதல் ஆளாய் காத்திருக்கும்

 

வளத்தூர் தி.கார்த்தி